பக்கங்கள்

வாழ்வெனும் சுருக்கம் .....

மரணத்தை முழுவதுமாய்
உணர்த்திச் சென்ற
நாளொன்றின் தனிமையில் - மனம்
இப்படிச் சொல்லிற்று
வாழ்க்கை இத்தனை 
சிறியதாய் இருந்திருக்க வேண்டாம்

மரணத்தை உணர்த்தியவள்
என் தோழி
காணும் போதெல்லாம்
சிரித்த முகமாய்....
இறந்த பின்பும் - அவள்
அப்படியே இருந்ததாக சிலர் 
சொல்லிச் சென்றனர்
மரணிக்கையிலும் எப்படி
சிரிக்க இயலும்
தீராத சந்தேகம்

இயல்பானதல்ல அம்மரணம் 
சாலையொன்றின் நடுவில்
அவள் சிதறிக் கிடந்தாள்
நான்கு துண்டுகளாய்
தன்னுள் இன்னுமொரு
உயிரினைச் சுமந்தபடி
அவளுக்கென்ன இத்தனை அவசரம்....

கொஞ்சமும் பொறுப்பென்பதே
இல்லை அவளுக்கு
அந்த காதல் கணவனின்
கண்ணீர் துளிகளை
யாரால் துடைக்க இயலும்
பாவி இப்படி அழவைத்தாளே

உடன் வந்த தந்தை
உயிர் பிழைத்து நிற்க....
புலம்பிக் கொண்டே இருக்கிறார்
தானே அவளைக் கொன்றதாய்
அவருக்கான தேறுதல் எங்கே?

உடன் பிறந்தவன்
ஒற்றையாய்
சாலையில் பிரண்டு அழுகிறான்
ஆறுதல் சொல்லவும்
எவரும் இன்றி

அதுவெல்லாம் சரி....
அம்மாவைத் தேடும்
அம்மூன்று வயது குழந்தைக்கு - இனி
ஆறுதல் யாரோ?

நினைக்கையில் மனம்
மீண்டும் சொல்லிற்று
வாழ்க்கை
இத்தனை சிறியதாய்
இருந்திருக்க வேண்டாம்.....


--பிரியா